காலம் காலமாக கதைசொல்லிகளால் வளமான நாடு நம்முடையது. புராணக் கதைகள், செவிவழிக் கதைகள் எனப் பல வகைமைகளிலும் சொல்லப்பட்ட கதைகளுக்கு நம்மிடையே பஞ்சமே இருந்ததில்லை.
கதையைக் கேட்பது போலவே எழுதுவதும் சுவாரஸ்யமான சவால். அந்த சவாலை எதிர்கொண்டு, உங்களையும் கதாசிரியராக்கும் வழிகளைச் சொன்னதுதான் விஷ்ணுபுரம் சரவணன் `இந்து தமிழ் திசை'யின் `வெற்றிக் கொடி' இணைப்பிதழில் எழுதிய `நானும் கதாசிரியரே!' என்னும் தொடர். இதில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே, உங்களின் கைகளில் தவழும் இந்தப் புத்தகம். மாணவர்கள் பயன் அடைவதற்காக சிலர் எழுதுவார்கள். ஆசிரியர்கள் பயன் அடைவதற்காக சிலர் எழுதுவார்கள். பெற்றோர்கள் பயன் அடைவதற்காக சிலர் எழுதுவார்கள். ஆனால், மாணவர், ஆசிரியர், பெற்றோர் என மூன்று தரப்பினரும் படித்துப் பயன் அடைவதற்கான கட்டுரைகளை இந்நூலின் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதைப் படிப்பதன்மூலமாக எவர் வேண்டுமானாலும் கதாசிரியராக உருவாகலாம்.
கதையைப் படிப்பவர்களை வசப்படுத்த எந்த மாதிரியான மொழி நடை இருக்க வேண்டும், கதையைப் பேச்சுத் தமிழில் எழுதலாமா, உரைநடைத் தமிழில் எழுதலாமா - கதை எழுதுவதில் இருக்கும் நுட்பமான இதுபோன்ற விஷயங்களை எளிமையாக கட்டுரைகளின் வழியாக விளக்குகிறார் நூலாசிரியர்.